#IPL2021 வார்னர் நீக்கத்தின் பின்னணி என்ன..? சன்ரைசர்ஸ் அணியில் திரைமறைவில் நடந்தது என்ன..? இதுதான் காரணமா..?

By karthikeyan VFirst Published May 3, 2021, 7:38 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டது குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியிருக்கிறார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கும் வார்னர், ஐபிஎல்லில் 50 அரைசதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அபாரமான பங்களிப்பு செய்திருப்பவர் வார்னர். வார்னரின் தலைமையில் தான் கடந்த 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

சன்ரைசர்ஸ் அணிக்காக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ள வார்னரை இந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாது ஆடும் லெவனில் கூட வாய்ப்பளிக்கவில்லை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம்.

இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது சன்ரைசர்ஸ் அணி. டேவிட் வார்னரும் ஃபார்மில் இல்லாமல் திணறிவந்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக திடீரென டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்த சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில்கூட வார்னருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வார்னர் மாதிரியான சாம்பியன் வீரரை ஆடும் லெவனில் கூட சேர்க்காதது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வார்னர் இனிமேல் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆட வாய்ப்பில்லை என்றும், இதுவே அந்த அணியில் அவருக்கு கடைசி சீசன் என்றும் டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன், வார்னரை ஆடும் லெவனில் கூட சேர்க்காதது வியப்புதான். அடுத்த சீசனில் புதிய கேப்டனின் கீழ் அணியை கட்டமைக்க நினைத்திருக்கலாம். அதனால் கேப்டனை மாற்றியிருக்கலாம். ஆனால் டேவிட் வார்னர் மாதிரியான ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனை ஆடும் லெவனில் சேர்க்காததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் இதுவே வார்னருக்கு கடைசி சீசனாக இருக்கலாம்.

மனீஷ் பாண்டேவின் நீக்கம் குறித்து வார்னரிடம் கேட்டிருப்பார்கள். சில சமயங்களில், அணி நிர்வாகம் அதுமாதிரியான நீக்கங்களை விரும்பாது. ஆனால் களத்தில் அணியை வழிநடத்தும் கேப்டன் சுயமாக முடிவெடுக்க விரும்புவார்.  எனவே திரைமறைவில் ஏதோ நடந்திருக்கிறது. அது பொதுவெளிக்கு தெரியாது என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்தார்.
 

click me!