ஐபிஎல்லில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் வில் ஜாக்ஸ். இங்கிலாந்து வீரரான வில் ஜாக்ஸை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்திருந்த நிலையில், அவர் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடன் ஒவ்வொரு சீசனையும் முடிப்பதே வழக்கமாகிவிட்டது.
16வது சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, இங்கிலாந்து அதிரடி வீரர் வில் ஜாக்ஸ், இங்கிலாந்து பவுலர் ரீஸ் டாப்ளி ஆகிய 2 வெளிநாட்டு வீரர்களையும், மற்ற சில உள்நாட்டு வீரர்களையும் ஏலத்தில் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அதிரடி வீரரான வில் ஜாக்ஸ், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது காயமடைந்ததால் அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். அவரை ரூ.3.2 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியதால் அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை ரூ.1 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி. அதிரடி பேட்டிங், ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடிய ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸின் இழப்பு ஆர்சிபி அணிக்கு பின்னடைவுதான். ஆனாலும் மைக்கேல் பிரேஸ்வெல்லும் நல்ல பேட்ஸ்மேன் தான். மைக்கேல் பிரேஸ்வெல் 16 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 113 ரன்கள் அடித்திருப்பதுடன், 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரும் நல்ல ஆல்ரவுண்டர் தான்.