ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்!

By Rsiva kumarFirst Published Mar 26, 2024, 5:03 PM IST
Highlights

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை இரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த 22 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 173 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே 176 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டி முடிந்து சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பத்திரமாக வீடு திரும்ப வசதியாக இன்று இரவு 11 மணிக்கு மேல் 27.3.2024 அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று CMRL தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் சேவை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: போட்டி நடைபெறும் நாளான இன்று மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் பெறுவதும் கடினமாக இருக்கும். அதோடு போட்டி முடிந்ததும் அரசு எஸ்டேட்/புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதோடு ரயில் டிக்கெட் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில் ஏற்படும்.

ஆகையால் பயணிகள் தங்களது மெட்ரோ டிக்கெட்டுகளை ஆன்லைனிலோ (CMRL மொபைல் ஆப், பேடிஎம், போன்பே, வாட்ஸ் அப், ஓஎன்டிசி) அல்லது ஏதேனும் ஒரு டிக்கெட் கவுண்டர் மூலமாகவோ வீட்டிலிருந்து மைதானத்திற்கும், மைதானத்திலிருந்து வீட்டிற்கும் செல்ல முன் கூட்டியே டிக்கெட் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சாதாரணமான இயக்க நேரத்திற்கு பிறகு இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு பிறகு அரசு எஸ்டேட்டிலிருந்து புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையம் வரை ரயில் சேவை இயக்கப்படும். ரயில் பயணிகள் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள கிரின் லைன் வழிதடத்தை (அண்ணா நகர், கோயம்பேடு நோக்கி) மட்டும் பயணிகள் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Considering the IPL cricket match that is scheduled at Chepauk Stadium, Chennai tomorrow on 26-3-2024 at 07:30 pm, CMRL wishes to inform that it will be operating metro trains beyond 11:00 pm tomorrow night till 01:00 am of 27-3-2024 to facilitate…

— Chennai Metro Rail (@cmrlofficial)

 

click me!