திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 2024 தொடரின் 15ஆவது லீக் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற லைகா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி திருச்சி சோழாஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே அர்ஜூன் மூர்த்தி 3 ரன்னுக்கு ரன் அவுட்டானார். அதன் பிறகு திருச்சி அணி வீரர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
வசீம் அகமது 17 ரன்களும், ஷியாம் சுந்தர் 5 ரன்னும், கேப்டன் ஆண்டனி தாஸ் 0 ரன்னும், பிஎஸ் நிர்மல் குமார் 3 ரன்னும், சரவண குமார் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது திருச்சி அணி 9.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து சஞ்சய் யாதவ் மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் கூட்டணி சேர்ந்து 7ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர்.
Paris Olympic Games 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்களின் விலை, எடை எவ்வளவு தெரியுமா?
இதில் சஞ்சய் யாதவ் 34 ரன்கள் எடுக்க அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே ஜமால் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 41 ரன்கள் எடுத்தார். இறுதியாக திருச்சி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேப்டன் ஷாருக்கான் மற்றும் முகமது தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். யுதீஷ்வரன் மற்றும் சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், கோலி, பும்ரா விளையாட வேண்டும் – காம்பீர் வேண்டுகோள்!
பின்னர் எளிய இலக்கை துரத்திய லைகா கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் சுரேஷ் குமார் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 4 ரன்களில் வெளியேற சுஜய் மற்றும் முகிலேஷ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சுஜய் 48 ரன்கள் எடுக்க, முகிலேஷ் 63 ரன்கள் எடுத்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது விளையாடிய 4 போட்டியில் 2 வெற்றி, 2 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.