ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளும், இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில், 6 அணிகள் இடம் பெற்ற லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது 2 அணிகள் வெளியேறிய நிலையில், 4 அணிகளுக்கான சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை வென்றது. 3ஆவது போட்டி கடந்த 10 ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியானது மழையால் ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது. அதன்படி 11ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது. இதில், முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: கடைசி வரை போராடி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழல் மன்னன் குல்தீப் யாதவ் ஃபஹர் ஜமான், அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4 ஆவது சூப்பர் 4 போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டீம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், குல்தீப் யாதவ் இந்திய அணி இக்கட்டான கட்டத்தில் இருந்த போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார்.
அவர், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்ற நிலையில், குல்தீப் யாதவ் 3 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். 80 ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி முகமது ஷமி முதலிடத்தில் உள்ள நிலையில், குல்தீப் யாதவ் 88 ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அஜித் அகர்கர் 97 போட்டிகளிலும், ஜாகீர் கான் 103 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 106 போட்டிகளிலும், இர்பான் பதான் 106 போட்டிகளிலும் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.