கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ஆண்ட்ரே ரஸல் நேற்று நடந்த போட்டியில் 7 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், நரைன் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் வெளியேற அதிரடியாக விளையாடி வந்த பிலிப் சால்ட் தன் பங்கிற்கு 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று ராமன்தீப் சிங்கும் 17 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 35 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியாக வந்த ஆண்ட்ரே ரஸல் ஆரம்பம் முதலே ஆதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒரு பவுலரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு ஒவ்வொரு பவுலரின் ஓவரிலும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாச கேகேஆர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி 6 ஓவரில் 80 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.8.50 கோடிக்கு கேகேஆர் அணியில் இடம் பெற்றிருந்த ஆண்ட்ரே ரஸல் தற்போது ரூ.16 கோடிக்கு அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். 7 ஆண்டுகளாக கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ஆண்ட்ரே ரஸல் இந்தப் போட்டியில் 7 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதுவரையில் 113 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 88* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 11 அரைசதங்கள் விளாசியுள்ளார்.