ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கம் கொடுக்க ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் 21 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடக்கும் 21 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை இதுவரையில் வெளியாகாத நிலையில், ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் மிகப்பெரிய மைதானமாக போற்றப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தகுதி சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, மற்றொரு தகுதிச் சுற்று போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தோனியின் கடைசி ஐபிஎல் 2024 தொடராக இந்த சீசன் இருக்கும் என்பதால் அவருக்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் வகையில் ஹோம் மைதானமான இந்த மைதானத்தில் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடத்தப்பட இருப்பதாக சொலப்படுகிறது.
ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.