ஏமாற்றிய ஷுப்மன் கில்.. ராகுலின் அதிரடியால் கர்நாடகா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 24, 2019, 6:16 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் சூப்பர் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது. 
 

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணியும் கர்நாடக அணியும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. இதில் சூப்பர் லீக் சுற்றில் கர்நாடக அணியும் பஞ்சாப் அணியும் மோதின. சூரத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது. 

பஞ்சாப் அணியில் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவர் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் மந்தீப் சிங் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். அவர் 9 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் விளாசினார். குர்கீரத் சிங் மன்னும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 44 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது. 

164 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் இந்த முறை 2 ரன்கள் மட்டுமே ஏமாற்றினார். ஆனால் அவருக்கும் சேர்த்து கேஎல் ராகுல் அடித்து ஆடினார். கேஎல் ராகுல் இந்த தொடரிலும் பெரிய அதிரடி இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. நன்றாக ஆடி ஸ்கோர் செய்தபோதிலும், அதிரடியான இன்னிங்ஸ் என்று குறிப்பிடும்படியாக அவர் எதுவும் ஆடவில்லை. 

அந்த குறையை தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஒருமுனையில் ரோஹன் கடம், மனீஷ் பாண்டே என விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, மறுமுனையில் ராகுல் அடித்து ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கர்நாடக அணியை வெற்றி பெற செய்தார். ராகுலின் அதிரடியால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி. 
 

click me!