டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் செய்த அசாத்திய சாதனை

By karthikeyan VFirst Published Nov 24, 2019, 4:13 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் அசாத்திய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மொத்தமுள்ள 20 விக்கெட்டுகளையும் ஃபாஸ்ட் பவுலர்களே வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டுகளிலும் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இந்தியாவில் வைத்து தென்னாப்பிரிக்காவையும், அதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

இந்த மூன்று தொடர்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் என தொடர்ச்சியாக மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் ஃபாஸ்ட் பவுலர்கள். சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, கடந்த 3-4 ஆண்டுகளாக தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் உலகம் முழுதும் எதிரணிகளை மிரட்டிவருகிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசியது. 

வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் முதன்முறையாக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் ஆடப்பட்டது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 106 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றிக்கு ஃபாஸ்ட் பவுலர்கள் தான் முக்கிய காரணம். 

முதல் இன்னிங்ஸில் வெறும் 106 ரன்களுக்கு வங்கதேசத்தை இந்திய அணி சுருட்டியது. அந்த இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் எதிரணியின் மொத்த(19) விக்கெட்டுகளையும் ஃபாஸ்ட் பவுலர்களே வீழ்த்தினர். ஸ்பின் பவுலர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. (மஹ்மதுல்லா ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுடன் மேட்ச் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் காயமடைந்த லிட்டன் தாஸுக்கு பதிலாக மாற்று வீரராக மெஹிடி ஹசன் ஆடியதால், மஹ்மதுல்லாவிற்கு மாற்று பேட்ஸ்மேன் வரவில்லை. அந்த அணியிடம் மஹ்மதுல்லாவிற்கு மாற்றாக அனுப்புவதற்கு பேட்ஸ்மேனே இல்லை என்பது கூடுதல் தகவல்).

இந்தியாவில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், ஃபாஸ்ட் பவுலர்களே மொத்த(19) விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பது இதுதான் முதன்முறை. இந்திய ஆடுகளங்களில் ஃபாஸ்ட் பவுலர்கள் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய விஷயம். அப்பேர்ப்பட்ட கஷ்டமான விஷயத்தை செய்து சாதனை படைத்துள்ளனர் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள்.
 

click me!