2வது டெஸ்ட்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்தியா

By karthikeyan VFirst Published Nov 24, 2019, 2:16 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. 
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் பகலிரவு போட்டியாக நடந்தது.

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளுமே முதன்முறையாக பிங்க் நிற பந்தில் இந்த போட்டியில் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் ஏமாற்றமளித்தனர். இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். புஜாராவும் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த புஜாரா, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த துணை கேப்டன் ரஹானேவும் சிறப்பாக ஆடினார். அரைசதம் அடித்த ரஹானே, புஜாராவை போலவே அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே ஆட்டமிழந்தார். ரஹானே 51 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிய கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி 136 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் அடித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்திய அணி.

241 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்தது. 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் மற்றும் கேப்டன் மோமினுல் ஹக் ஆகிய இருவரும் ரன்னே எடுக்காமல் இஷாந்த்தின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினர். மற்றொரு தொடக்க வீரரான இம்ருல் கைஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது மிதுன் 6 ரன்களில் உமேஷின் வேகத்தில் வீழ்ந்தார்.

அதன்பின்னர் அனுபவ வீரர்களான முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். ஆனால் மஹ்மதுல்லாவிற்கு அடிபட்டதால், அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். இதையடுத்து ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆன லிட்டன் தாஸுக்கு பதிலாக மாற்று வீரரான மெஹிடி ஹசன் களத்திற்கு வந்தார்.  

மெஹிடி ஹசனை 15 ரன்களில் இஷாந்த் சர்மா வீழ்த்த, தைஜுல் இஸ்லாமை உமேஷ் வீழ்த்தினார். அத்துடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்திருந்தது. அரைசதம் அடித்த முஷ்ஃபிகுர் ரஹீம் மட்டும் களத்தில் நின்றார். 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் முஷ்ஃபிகுரும் எபாதத் ஹுசைனும் களமிறங்கினர். எபாதத் ஹுசைனை உமேஷ் வீழ்த்த, இதையடுத்து அதிரடியாக ஆடினார் முஷ்ஃபிகுர். ஒருசில பவுண்டரிகளை விளாசிய அவரையும் உமேஷ் யாதவ் 74 ரன்களில் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக அல் அமீனையும் உமேஷே வீழ்த்தினார். மஹ்மதுல்லா ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிட்டதால் 9 விக்கெட்டுகளுடன் போட்டி முடிந்தது. 195 ரன்களுக்கே வங்கதேச அணி ஆல் அவுட்டானதால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என இந்திய அணி தொடரை வென்றதோடு, 360 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

அதுமட்டுமல்லாமல் இது இந்திய அணியின் தொடர்ச்சியாக 4வது இன்னிங்ஸ் வெற்றி. இதன்மூலம் தொடர்ச்சியாக அதிகமான இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 
 

click me!