விராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 9:11 PM IST
Highlights

3 விதமான அணிகளுக்கும் கேப்டன்சி செய்யும் விராட் கோலி, கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான அணிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

ஆனால் விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், ஐசிசி தொடர்கள் எதுவும் வென்றதில்லை. ஆனால் அதேவேளையில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி 2018ல் ஆசிய கோப்பையை வென்றது. 

ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். ரோஹித் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் எட்டிலும், 19 டி20 போட்டிகளில் பதினைந்திலும் வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மாவின் வின்னிங் சராசரி அதிகம். கோலி அளவுக்கு ரோஹித் சர்மா நிறைய போட்டிகளுக்கு கேப்டன்சி செய்யவில்லையென்பதால், வின்னிங் சராசரியை வைத்து இருவரது கேப்டன்சியையும் ஒப்பிடமுடியாது. 

ஆனால் ரோஹித் சர்மா, தனது கேப்டன்சி திறமையை பலமுறை நிரூபித்துள்ளார். இந்திய அணிக்கு சிறப்பாக கேப்டன்சி செய்திருப்பது மட்டுமல்லாமல், ஐபிஎல்லில் அவரது கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றுள்ளது. 

எனவே இந்திய அணியை வழிநடத்த தகுதியானவர் ரோஹித் சர்மா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே டி20 அணியின் கேப்டன்சியை ரோஹித்திடம் வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. இந்நிலையில், விராட் கோலியின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடமும் பகிர்ந்தளிப்பது குறித்து விராட் கோலி சிந்திக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வாளருமான கிரன் மோர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரன் மோர், விராட் கோலி மூன்றுவிதமான இந்திய அணிகளையும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியையும் வழிநடத்துகிறார். எனவே அவருக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது. ரோஹித்தும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எனவே ரோஹித்திடம் கேப்டன்சி பொறுப்பை பகிர்ந்தளிப்பது குறித்து கோலி சிந்திக்க வேண்டும். அது அவருக்கு நல்லது என்று கிரன் மோர் அறிவுறுத்தியுள்ளார். 

இதே கருத்தைத்தான் முன்னாள் வீரர் அதுல் வாசனும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!