வெறும் நாலே பந்தில் அவரை எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்.. வாசிம் அக்ரம் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 7:59 PM IST
Highlights

மிஸ்பா உல் ஹக்கை நான்கே பந்தில் அவுட்டாக்கிவிடுவேன் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 
 

மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களில் ஒருவர். அந்த அணியின் மிக முக்கியமான வீரராக வலம்வந்தவர். பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்ட், 162 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக தனி ஒரு நபராக எத்தனையோ போட்டிகளில் கடுமையாக போராடியிருக்கிறார். அப்படி தனி நபராக போராடியதில் வெற்றியும் கண்டிருக்கிறார்; தோல்வியும் கண்டிருக்கிறார். வெற்றி - தோல்வி ஒருபுறம் இருந்தாலும், மிஸ்பா எந்த சூழலிலும் போராட தவறியதில்லை. 

பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். ஓய்வு பெற்றுவிட்ட மிஸ்பா உல் ஹக், தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் உள்ளார். 

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த அவரை, வெறும் நான்கே பந்தில் நான் அவுட்டாக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம். வாசிம் அக்ரம் ஆல்டைம் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதுடன், அருமையாக ஸ்விங்கும் செய்வார். வேகமும் ஸ்விங்கும் கலந்து வீசுவதால், அவரது பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின், லாரா, ஜெயசூரியா போன்ற பெரிய பெரிய ஜாம்பவன்களே திணறியுள்ளனர். 

பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 916 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தலைசிறந்த பவுலரான வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக்கை நான்கே பந்தில் வீழ்த்திவிடுவேன் என்று கூறியதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் திட்ட மேலாளர் ஹசன் சீமா தெரிவித்துள்ளார். 

ஹசன் சீமா, இங்கிலாந்து பவுலரும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ஆடியவருமான ஸ்டீவன் ஃபின்னுடனான உரையாடலின்போது, வாசிம் அக்ரம் ஒருமுறை இவ்வாறு கூறியதாக சுட்டிக்காட்டினார். “ஃபின் ஏன் மற்ற பந்துகளில் எல்லாம் மிஸ்பாவை வீழ்த்துவதில்லை. மிஸ்பா உல் ஹக் நான்கு பந்து பேட்ஸ்மேன். மிஸ்பாவை நான்கே பந்தில் அவுட்டாக்குவது எப்படி என்று எனக்கு தெரியும்” என்று வாசிம் அக்ரம் கூறியதாக சீமா சொன்னார். 

அதற்கு பதிலளித்த ஸ்டீவன் ஃபின், கடந்தகாலங்களை போல இப்போதெல்லாம் வெள்ளை பந்து ஸ்விங் ஆவதில்லை என்று சொல்கின்றனர். ஆனால் வெள்ளைப்பந்தை சிறப்பாக ஷைனிங் செய்து அருமையாக ஸ்விங் செய்தார் வாசிம் அக்ரம். அதுதான் வாசிம் அக்ரம் என்று ஃபின் புகழாரம் சூட்டினார். 
 

click me!