இந்திய அணி மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு! சில பாகிஸ்தான் விஷக்கிருமிகளை வெளுத்துவாங்கிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 5:57 PM IST
Highlights

2019 உலக கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக அவதூறு பரப்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 
 

2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. 

அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. இதையடுத்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக குற்றம்சாட்டிவருகின்றனர். 

இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு முன்பாகவே, பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதை இந்தியா விரும்பாது; எனவே இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அந்த போட்டியில் இந்திய அணி ஆடிய விதம் தனக்கு வியப்பளித்ததாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், புத்தகத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து அதுகுறித்த விமர்சனத்தை மீண்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களை முன்வைக்க தொடங்கிவிட்டனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்துல் ரசாக், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே தான் இங்கிலாந்திடம் தோற்றது என்பதை நான் தொடர்ந்து கூறிவருகிறேன். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் எளிதாக அடிக்கவல்ல தோனி தடுப்பாட்டம் ஆடினார். தோற்பதற்காகத்தான் அப்படி ஆடினார். உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்தார். 

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹமதுவும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நேரடியாக அதை சொல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தன்னிடம் அப்படி சொன்னதாக கூறினார். இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக கெய்ல், ரசல், ஹோல்டர் ஆகிய மூவரும் தன்னிடம் கூறியதாக முஷ்டாக் அஹமது தெரிவித்தார். 

இப்படி தொடர்ச்சியாக, இந்திய அணி மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அவதூறு பரப்பிவருகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

இதுகுறித்து பேசிய  ஆகாஷ் சோப்ரா, ஐசிசி தூதராக இருக்கும் வக்கார் யூனிஸ், இந்திய அணி உலக கோப்பையில் இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றதாக கூறினார். இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக பென் ஸ்டோக்ஸ் கூறவில்லை. விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார். தோற்பதற்காகவா அப்படி ஆடுவார்கள்? தோனி டெத் ஓவர்களில் ஆடுவதற்கென்று தனி திட்டம் வைத்திருப்பார். அதையெல்லாம் பற்றி சரியாக தெரியாமல் பென் ஸ்டோக்ஸ் ஏதோ சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தியா வேண்டுமென்றே தோற்றதாக ஸ்டோக்ஸ் சொல்லவில்லை.

ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். உங்களால் எப்படி அப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது? அந்த போட்டி, இந்திய அணிக்கும் முக்கியமான போட்டிதான். புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கு அந்த போட்டி முக்கியமானது தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!