இந்தியா - ஆஸ்திரேலியா ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் லெவன்.. ஆரோன் ஃபின்ச்சின் ரொம்ப நேர்மையான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 4:02 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த ஆல்டைம் ஒருநாள் லெவனை ஆரோன் ஃபின்ச் தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதால், கிரிக்கெட் வீரர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். எனவே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடும் கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடன் உரையாடுவது, ஆல்டைம் லெவனை தேர்வு செய்வது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஒரு நேர்காணலில், இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த ஆல்டைம் ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார். 

தனது ஆல்டைம் லெவனின் தொடக்க வீரர்களாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசிய தனது சமகால திறமைசாலி ரோஹித் சர்மாவை ஒதுக்கிவிட்டு தனது ஆல்டைம் லெவனில் சேவாக்கை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார் ஃபின்ச். 

”சேவாக் தான் எனது நம்பர் ஒன் தேர்வு. அவர் எதிரணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடக்கூடியவர். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்துவிட்டால், எதிரணி படுத்துவிடும். மற்றொரு தொடக்க வீரராக ரோஹித்தைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சேவாக்குடன் கில்கிறிஸ்ட் ஆடுவதை பார்க்க எனக்கு ஆசை. எனவே சேவாக்கின் தொடக்க ஜோடியாக கில்கிறிஸ்ட்டை தேர்வு செய்கிறேன் என்றார் ஃபின்ச். 

மூன்றாம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கையும், நான்காம் வரிசை வீரராக ரன் மெஷின் விராட் கோலியையும் தேர்வு செய்த ஃபின்ச், மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபினிஷராக தோனியை தேர்வு செய்த ஃபின்ச், தோனி - கில்கிறிஸ்ட் ஆகிய இருவரில் யார் வேண்டுமானாலும் விக்கெட் கீப்பிங் செய்துகொள்ளலாம் என்றார். தோனி - கில்கிறிஸ்ட் ஆகிய இருவருமே சிறந்த வீரர்கள் என்பதால், இருவரில் ஒருவரை புறக்கணிக்க மனமில்லாமல் இருவரையும் தேர்வு செய்துவிட்டார்.

 

பிரெட் லீ, மெக்ராத் மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்தார் ஃபின்ச். ஸ்பின்னராக ஒருவரை மட்டும் தேர்வு செய்வது கடினம். பிராட் ஹாக் அருமையான ஸ்பின்னர். அதேபோல ஹர்பஜன் சிங்கும் சூப்பர் ஸ்பின்னர். ஜடேஜாவை ஸ்பின்னராக எடுத்தால் 8ம் வரிசையில் பேட்டிங்கும் ஆடுவார். இவர்களில் ஒருவரை மட்டும் தேர்வு செய்வது கடினம். எனவே மூவரில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லிவிட்டார். 

ஃபின்ச்சின் ஆல்டைம் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் லெவன்:

வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், தோனி, ஸ்பின்னர்(பிராட் ஹாக், ஹர்பஜன், ஜடேஜா), பிரெட் லீ, மெக்ராத், பும்ரா.
 

click me!