விராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்..? ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 4, 2020, 10:45 PM IST
Highlights

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

இந்நிலையில், அனைத்து கிரிக்கெட் வீரர்களிடமும் முன்வைக்கப்படும் கேள்வி, ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபின்ச்சிடமும் முன்வைக்கப்பட்டது. விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஃபின்ச்சிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஆரோன் ஃபின்ச், டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருவரது ரெக்கார்டுகளுமே சிறப்பாக உள்ளது. ஆனால் விராட் கோலி இங்கிலாந்தில் ஆண்டர்சனின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார். இங்கிலாந்தில் சரியாக ஆடாத கோலி, அதன்பின்னர் அதிலிருந்து மீண்டு மீண்டும் அபாரமாக ஆட ஆரம்பித்தார் கோலி. ஆனால் ஸ்மித், எந்த நாட்டிலும் எந்த பவுலரையும் எதிர்கொள்ள திணறியதே இல்லை. ஸ்மித் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்.

கோலி - ஸ்மித் ஆகிய இருவரும் உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் அபாரமாக ஆடி ரன்களை குவிப்பதால் தான், அவர்கள் மற்ற பேட்ஸ்மேன்களை விட உயர்ந்து நிற்கின்றனர். சில நேரங்களில், இவர்களும் விரைவில் அவுட்டாகலாம். அது எல்லாருக்கும் நடப்பதுதான். ஆனால், அவர்கள் பெரும்பாலும் விரைவில் அவுட்டாவதில்லை. பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக ஆடிவிடுகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மேன். 

விராட் கோலி அவரது கெரியரை முடிக்கும்போது, ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் என்ற உச்ச நிலையை அடைவார். அவருக்கு எதிராக ஆடுவது மிகக்கடினம். அவரது பேட்டிங்கை பார்க்கவே ஆசையாக இருக்கும். அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் சொந்தக்காரர். ஆனால் விராட் கோலி சதங்களை விளாசி ரன்களை குவித்து சாதனைகளை விரட்டுகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித்தை விட கோலி சிறந்து விளங்குகிறார் என்று ஃபின்ச் தெரிவித்துள்ளார். 
 

click me!