நம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி! முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 2:34 PM IST
Highlights

இர்ஃபான் பதான் இந்திய அணியிலிருந்து தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசியுள்ளார். 
 

2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1105 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1544 ரன்களை அடித்துள்ளதோடு 173 விக்கெட்டுகளையும் இர்ஃபான் பதான் வீழ்த்தியுள்ளார்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் இர்ஃபான் பதான்.  ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்தியது அவர் தான். 2006ல் பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்ட்டில், முதல் ஓவரிலேயே சல்மான் பட், யூசுஃப், யூனிஸ் கான் ஆகிய சிறந்த வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். 

2007 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனாலும் அதன்பின்னர் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் நிரந்தர இடம் அவருக்கு கிடைக்கவில்லை. 2009ல் இலங்கைக்கு எதிரான ஒரு டி20 போட்டியில், தனது சகோதரர் யூசுஃப் பதானுடன் இணைந்து அதிரடியாக ஆடி, வெற்றிக்கு தூரமாக இந்திய அணியை, வெற்றி பெற செய்தார். 

இந்திய அணிக்காக பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். ஆனாலும், தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோதே, 27 வயதிலேயே அவரது கெரியர் முடிந்துவிட்டது. 

அதுகுறித்த தனது வேதனையை இர்ஃபான் பதான் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், நான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு முன், நான் ஆடிய கடைசி டி20 மற்றும் கடைசி ஒருநாள் ஆகிய இரண்டு போட்டிகளிலும் நான் தான் ஆட்டநாயகன். ரிதிமான் சஹா காயம் காரணமாக ஓராண்டாக ஆடவில்லை. அந்த காலக்கட்டத்தில் டெஸ்ட் அணியில் இடம்பெற்று வெளிநாடுகளில் 2 சதங்களை அடித்தார் ரிஷப் பண்ட். ஆனாலும் ரிதிமான் சஹா உடற்தகுதி பெற்றதும், ஓராண்டுக்கு பிறகும் கூட உடனடியாக அணியில் இடம்பெற்றார். ஒரு சிலருக்கு அணி நிர்வாகம் முழு ஆதரவை அளிக்கிறது. ஒரு சிலருக்கு அந்த ஆதரவு கிடைப்பதில்லை. மறுவாய்ப்பும் ஆதரவும் கிடைக்காத சில  வீரர்களில் நானும் ஒருவன்.

இர்ஃபான் பதான் ஸ்வின் செய்வதில்லை; இனிமேல் அவரால் ஸ்விங் செய்ய முடியாது என்றெல்லாம் பேசினார்கள். அணி நிர்வாகமும் கேப்டனும் எனது ரோல் என்னவென்று கூறுகிறார்களோ அதற்கேற்ப தான் நான் பந்துவீசமுடியும். விக்கெட் எடுக்க பந்துவீச வேண்டாம்; ரன்னை கட்டுப்படுத்துங்கள் போதும் என்றார்கள். எனது ரோல் கட்டுக்கோப்பாக வீச வேண்டும் என்பதுதான். எனவே அதற்கேற்ற வகையில் நல்ல வேரியேஷனுடன், கட்டர்களை வீசினேன். பயிற்சியிலும் அதேபோலத்தான் வீச சொல்வார்கள். அதனால் அப்படி வீசினேன். எனது ரோலை மாற்றினார்கள். ஆனால் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை. 

எனக்கு நினைவிருக்கிறது.. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்(2009ல் நடந்த போட்டி) வெற்றிக்கு சாத்தியமே இல்லாத சூழலில், நானும் யூசுஃப் பதானும் இணைந்து அணியை வெற்றி பெற வைத்தோம். இந்த காலக்கட்டத்தில் ஒரு வீரர், சனத் ஜெயசூரியா மாதிரியான வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி, கடைசி நேரத்தில் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார் என்றால், அவர் குறைந்தது ஒரு ஆண்டாவது அணியில் நீடிப்பார். ஆனால் என்னை ஒதுக்கிவிட்டார்கள்.

அதன்பின்னர் நியூசிலாந்துக்கு சென்றோம். 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் கூட எனக்கு ஆட வாய்ப்பளிக்கவில்லை. இந்திய அணி முதல் 3 போட்டிகளிலும் வென்று 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் வென்றது இந்திய அணி. நான்காவது போட்டி ரத்தாகிவிட்டது. கடைசி போட்டியில் கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. எனது ஆட்டத்தில் என்ன குறை, எப்படி மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனிடம் கேட்டேன். நீ பேட்டிங், பவுலிங் இரண்டுமே நன்றாகத்தான் செய்கிறாய். ஆனால் சில விஷயங்கள் என் கையில் இல்லை என்று கிறிஸ்டன்ன் சொல்லிவிட்டார்.

2008 ஆஸ்திரேலிய தொடரில் நான் சரியாக பந்துவீசவில்லை என்று தோனி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நான் அந்த தொடரில் நன்றாகத்தான் வீசியிருந்தேன். அதனால் தோனியிடம் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்து அவரிடமே நேரில் சென்று கேட்டேன். ஏனெனில், ஊடகங்கள் தோனியின் கூற்றை திரித்து கூறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதால், தோனியிடமே தெளிவுபடுத்த நினைத்து, அவரிடம் சென்று கேட்டேன். அதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை இர்ஃபான்.. எல்லாமே திட்டப்படிதான் சென்றுகொண்டிருக்கிறது என்றார் தோனி. இப்படியொரு பதிலை தோனியிடமிருந்து பெற்றேன். ஆனால் அணியில் மட்டும்  வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் போய் விளக்கம் கேட்டுக்கொண்டே இருப்பது சரியாக இருக்காது என்பதால் விட்டுவிட்டேன் என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார் இர்ஃபான் பதான். 
 

click me!