
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதமும், 2வது போட்டியில் 186 ரன்களும் அடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இலங்கையில் வின்னிங் நாக் ஆடியதை போலவே இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டிலும் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்தார்.
சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த ஜோ ரூட் 218 ரன்களை குவித்து ஷபாஸ் நதீமின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இரட்டை சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தார் ஜோ ரூட்.
அவற்றில் முக்கியமான ஒன்று, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படுபவருமான டான் பிராட்மேனுக்கு பிறகு தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்த கேப்டன் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
1937ம் ஆண்டு தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் 150 ரன்களுக்கு மேல் குவித்தார். அந்த சாதனையை 84 ஆண்டுகளுக்கு பிறகு படைத்த கேப்டன் ஜோ ரூட் தான். இதற்கிடைப்பட்ட காலத்தில் எந்த கேப்டனும் இந்த சாதனையை செய்யவில்லை. ஜோ ரூட்டின் இந்த சாதனை பயணம் முடியவில்லை. அடுத்த டெஸ்ட்டிலும் 150 ரன்களை கடந்தால், பிராட்மேனின் சாதனையை முறியடித்து, தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகிவிடுவார்.