#INDvsENG ஷபாஸ் நதீமுக்கு சபாஷ்.. தன்னை அணியில் சேர்த்ததற்கு ஒரே விக்கெட்டில் அர்த்தம் சேர்த்த நதீம்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 3:35 PM IST
Highlights

தன்னை அணியில் சேர்த்ததற்கு ஒரே விக்கெட்டின் மூலம் அர்த்தம் சேர்த்தார் இடது கை ஸ்பின்னர் ஷபாஸ் நதீம்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி 87 ரன்களும், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் அடித்தனர்.

ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 500 ரன்களை நெருங்கிவருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரூட்டும் ஸ்டோக்ஸும் தொடர்ந்த நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. 2வது செசனில் தான் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். 3வது செசன் தொடங்கிய சில நிமிடங்களில் ரூட் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்றாலும், ரூட், சிப்ளி, ஸ்டோக்ஸ் ஆகியோர் ஸ்பின்னை சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் என்பதால், அஷ்வின், சுந்தர், நதீம் ஆகியோரிடம் விக்கெட்டை எளிதாக இழந்துவிடாமல் அபாரமாக ஆடினர். அதிலும் ரூட், ஸ்வீப் ஷாட்டுகளை நன்றாக ஆடக்கூடியவர் என்பதால் ஸ்பின் பவுலிங்கை மிக எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக ஆடினார்.

இந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில் அஷ்வின் மட்டுமே அனுபவ ஸ்பின்னர். நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்குமே இதுதான் 2வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அதனால் அவர்களால் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டருக்குள் ஊடுருவி சிதைக்க முடியவில்லை. அதன்விளைவாக, குல்தீப் யாதவை அணியில் எடுத்திருக்கலாம் என்ற கருத்து எழுந்தது.

ஷபாஸ் நதீமிற்கு பதிலாக ஒரு வெரைட்டிக்காக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பை எடுத்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக எழுந்தது. ஆனால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இலங்கை இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவிடம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மண்டியிட்டு சரணடைந்ததால், இடது கை ஸ்பின் எடுபடும் என்று நதீம் எடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஷபாஸ் நதீமால் எளிதாக விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

ஆனாலும் 2ம் நாள் ஆட்டமான இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை 82 ரன்களில் வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த ஷபாஸ் நதீம், அதைவிட பெரிய விக்கெட்டான ஜோ ரூட்டை 218 ரன்களுக்கு வீழ்த்தி, தன்னை அணியில் எடுத்ததற்கான அர்த்தத்தை சேர்த்தார் நதீம்.
 

click me!