#PAKvsSA முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானை விட படுமோசமா சுருண்ட தென்னாப்பிரிக்கா..! ஹசன் அலி அபார பவுலிங்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 2:43 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்கு சுருண்டது.
 

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற, 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்துவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் நோர்க்யாவின் வேகத்தில் 272 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். பாபர் அசாம் 77 ரன்கள் அடித்தார். ஃபஹீம் அஷ்ரஃப் 78 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான்.

பாபர் அசாம் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃபை தவிர, ஃபவாத் ஆலம் ஓரளவிற்கு நன்றாக ஆடினார். பாபர் அசாமுடன் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த அவர், 45 ரன்கள் அடித்தார். பாகிஸ்தானை 272 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சுருட்டியது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் நோர்க்யா அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் டெஸ்ட்டை போலவே பேட்டிங்கில் மீண்டும் சொதப்பியது. தொடக்க வீரர் எல்கர் 15 ரன்களுக்கு ஹசன் அலியின் பந்தில் ஆட்டமிழக்க, வாண்டர்டசன் அடுத்த பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். சீனியர் வீரர் டுப்ளெசிஸ் 17 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் 32 ரன்களிலும் ஆட்டமிழக்க, பவுமா 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருக்க, மறுமுனையில் கேப்டன் டி காக்(29), மல்டர்(33), ஜார்ஜ் லிண்டே(21), மஹராஜ், ரபாடா, நோர்க்யா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 201 ரன்களுக்கே சுருண்டது தென்னாப்பிரிக்க அணி.

பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஹசன் அலி அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி.
 

click me!