IPL 2021 முடியாதுனு எதுவுமே இல்ல முடிச்சு காட்டுறோம்..! இஷான் கிஷன் 16 பந்தில் அரைசதம்.. வேற லெவல் பேட்டிங்

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 8:04 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் பிளே ஆஃபிற்கு முன்னேற, 171 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி வெறும் 16 பந்தில் அரைசதம் அடித்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்துவரும் நிலையில், கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கேகேஆர் அணி +0.587 நெட் ரன்ரேட்டுடன் 4ம் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்த நிலையில், கேகேஆரை பின்னுக்குத்தள்ளி மும்பை அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமென்றால் சன்ரைசர்ஸை 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அதையும் செய்துதான் பார்த்துவிடுவோமே.. என்கிற வகையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வெற்றி வித்தியாசமே 171 ரன்களாக இருக்க வேண்டுமென்றால், மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். இதையும் முயன்றுதான் பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில் களமிறங்கிய மும்பை அணியின் நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் முழு சுதந்திரம் அளித்தது என்பதை இஷான் கிஷனின் பேட்டிங் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

முதல் பந்து முதலே அடித்து ஆட ஆரம்பித்தார் இஷான் கிஷன். பவுலர்கள் போடும் பந்துகள் அனைத்தையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அனுப்பினார் இஷான் கிஷன். இஷானின் அதிரடியை கண்ட ரோஹித் சர்மா, அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்தார். 2வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன், ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ அனுப்ப, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஐபிஎல்லில் அதிவேக 3வது அரைசதம்.

ரோஹித் சர்மா பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷனின் காட்டடி பேட்டிங்கால் 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை குவித்துள்ளது மும்பை அணி.

இஷான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். மிகப்பெரிய ஸ்கோரை அடிக்கும் உறுதியுடன் ஆடிவருகிறது மும்பை அணி.
 

click me!