ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை எடுத்தது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி டெத் பவுலிங்கை வீசக்கூடிய ஒரு ஆல்ரவுண்டரை கண்டிப்பாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஏலத்திற்கு சென்றது.
அந்த வகையில், ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை எடுக்க முயன்றது. ஆனால் கடைசி வரை விட்டுக்கொடுக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி, அவரை ரூ.18.5 கோடி என்ற உச்சபட்ச தொகைக்கு எடுத்தது. சிஎஸ்கே அணியிடம் மொத்தமாகவே கையில் ரூ.20.55 கோடி மட்டுமே இருந்ததால் சாம் கரனுக்கான போட்டியிலிருந்து பின் வாங்கியது.
IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை
அதன்பின்னர் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை எடுக்க முயன்றது. அவரை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.
இதையடுத்து சமகாலத்தின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் விடப்பட்டார். ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட ஸ்டோஸுக்கு ஆரம்பத்தில் மற்ற அணிகள் போட்டி போட, ரூ.14 கோடியை கடந்த பின்னர் போட்டிக்குள் நுழைந்த சிஎஸ்கே அணி, ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடி ரூ.16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை எடுத்தது சிஎஸ்கே. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச தொகை ஆகும். சிஎஸ்கே அணி ஒரு வீரருக்கு கொடுத்த அதிகபட்ச தொகையும் இதுதான்.