ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் கேப்டனை தேடும் அணி மற்றும் கேப்டன்சிக்கு தகுதியான வீரர் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் கேப்டன்சிக்கு தகுதியான சில வீரர்களின் பெயர்கள் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எந்த அணிக்கு கேப்டன் தேவை, அவர்களது கேப்டன்சி ஆப்சன் யார் என்பது குறித்து பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே மினி ஏலத்திற்கு முன்பாக கேப்டனை விடுவித்தன. கேப்டன் மயன்க் அகர்வாலை விடுவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, அடுத்த கேப்டனாக ஷிகர் தவானை நியமித்தது.
சிஎஸ்கே அணிக்கு தோனிக்கு அடுத்த கேப்டன் தேவை. ஆனாலும் சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்கலாம் என்பதால், கேப்டன்சி ஆப்சனில் சிஎஸ்கே கவனம் செலுத்த வாய்ப்பில்லை.
எனவே, கேப்டன் கேன் வில்லியம்சனை விடுவித்த சன்ரைசர்ஸ் அணி தான், புதிய கேப்டனுக்கான சரியான வீரரை தேடுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 2018லிருந்து 2022 வரை செயல்பட்ட கேன் வில்லியம்சன், 46 போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். மிகப்பெரிய வீரர்கள் அணியில் இல்லாதபோதிலும், இருக்கிற வீரர்களை சரியாக வழிநடத்தி, அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வித்தை அறிந்தவர் கேன் வில்லியம்சன். 2018 ஐபிஎல்லில் முதல் முறையாக கேப்டன்சியை ஏற்ற வில்லியம்சன், அந்த சீசனில் சன்ரைசர்ஸை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார். ஆனால் ஃபைனலில் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் இழந்தது. ஒரு கேப்டனாக கேன் வில்லியம்சன் சிறப்பாகத்தான் செயல்பட்டுவந்தார். கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு அவரை தக்கவைத்த சன்ரைசர்ஸ் அணி, இப்போது விடுவித்துள்ளது. அதனால் அவரை மீண்டும் எடுக்க வாய்ப்பில்லை.
எனவே சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க முழு நேர கேப்டன் ஆடாத போட்டிகளில் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். 2014 அண்டர் 19 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். கடந்த சீசனில் அபாரமாக விளையாடி, சன்ரைசர்ஸ் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட மார்க்ரம் கேப்டன்சி அனுபவமும் கொண்டவர் என்பதால், அவரையே கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது.
ஏலத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் தசுன் ஷனாகா சன்ரைசர்ஸின் கேப்டன்சி தேடலுக்கான சிறந்த ஆப்சனாக இருப்பார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தி அபாரமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துவருகிறார் ஷனாகா. வியூகங்கள் வகுப்பதிலும், வீரர்களை கையாள்வதிலும் சிறந்தவராக திகழ்கிறார். ஷனாகா தலைமைத்துவ பண்புகளும் தகுதிகளும் நிறைந்தவர் மட்டுமல்லாது சிறந்த ஆல்ரவுண்டரும் கூட. அதிரடியான பேட்டிங், மிதவேக பவுலிங் அணிக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்யக்கூடியவர். இவர் மாதிரியான வீரர் மீது சன்ரைசர்ஸ் ஆர்வம் காட்டும் என்பதால், அவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.
BAN vs IND: 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து 2 இந்திய வீரர்கள் விலகல்..!
மினி ஏலத்தில் இடம்பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய ஆல்ரவுண்டர்கள் கேப்டன்சிக்கு தகுதியான வீரர்கள் தான் என்பதால் அவர்கள் மீதும் கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்டோக்ஸ், ஹோல்டர் ஆகியோர் கேப்டன்சி ஆப்சனாக பார்க்கப்படும் வாய்ப்பு குறைவுதான். அவர்கள் ஆல்ரவுண்டர்கள் என்றவகையில் அவர்கள் மீது அணிகள் ஆர்வம் செலுத்துமே தவிர, கேப்டன்சி ஆப்சனாக பார்க்கப்பட்டமாட்டார்கள்.