
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. இந்த மெகா ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், ஷ்ரேயாஸ் ஐயர், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட பெரிய வீரர்களின் பெயர்கள் ஏல பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதேவேளையில், அண்டர் 19 உலக கோப்பையை இந்திய வீரர்கள் உட்பட பல சிறந்த இளம் வீரர்களின் பெயர்களும் ஏலத்தில் உள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் இந்த சீசன் முதல் ஆடவுள்ளதால், ஏலம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கும்.
பெரிய வீரர்கள் சிலரும் இளம் வீரர்கள் சிலரும் பெரும் தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ள அதேவேளையில், இந்திய அணிக்காக ஆடியுள்ள சில அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் ஏலத்தில் விலைபோக வாய்ப்பேயில்லை. அப்படியான 5 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
1. கேதர் ஜாதவ்
ஐபிஎல்லில் 2010ம் ஆண்டு அறிமுகமான கேதர் ஜாதவ், ஆர்சிபி, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2018, 2019, 2020ஆகிய சீசன்களில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த கேதர் ஜாதவ், 2020 சீசனில் படுமோசமாக சொதப்பியதன் விளைவாக சிஎஸ்கே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அவரை 2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. அந்த சீசனிலும் சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கேதர் ஜாதவிற்கு, டெத் ஓவரில் பெரிய ஷாட்டுகளை ஆடும் திறன் இல்லாததால் அவரை அணியில் எடுத்தும் பிரயோஜனமில்லை என்பதால், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராது. எனவே இந்த ஏலத்தில் அவர் விலைபோக வாய்ப்பில்லை.
2. முரளி விஜய்
ஒருகாலத்தில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் முரளி விஜய். சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய முரளி விஜய், கடந்த சில சீசன்களாக சோபிக்கவில்லை. ப்ரொஃபஷனல் கிரிக்கெட்டில் அவர் ஆடுவது பெருமளவில் குறைந்துவிட்டதால், அவரால் சரியாக விளையாட முடியவில்லை. 2018-2020 ஐபில்லில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே ஆடிய முரளி விஜய், 2021 ஐபிஎல்லில் ஆடவேயில்லை. அவரது கிரிக்கெட் கெரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இப்போதைய இளம் வீரர்களுடன் அவரால் போட்டியிட முடியாது. எனவே அவரை இனிமேல் எந்த அணியும் எடுக்க வாய்ப்பில்லை.
3. இஷாந்த் சர்மா
2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் இஷாந்த் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளில் ஆடியுள்ள இஷாந்த் சர்மா, 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இளம் வீரர்கள் பலர் ஃபாஸ்ட் பவுலிங்கில் மிரட்டுவதால், 33 வயதான இஷாந்த் சர்மா மீது எந்த அணியும் ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை.
4. புஜாரா
டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்ட புஜாரா மீது ஐபிஎல் அணிகள் எதுவுமே ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக, அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு கடந்த சீசனில் ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அண்மைக்காலமாக சரியாக ஆடாத புஜாராவை இந்த சீசனில் எந்த அணியும் கண்டிப்பாக ஏலத்தில் எடுக்காது.
5. ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரியும் புஜாரா மாதிரிதான். டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்ட ஹனுமா விஹாரியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாது. அதனால் அவர் விலைபோக வாய்ப்பேயில்லை.