
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 265 ரன்கள் அடித்தது. ரோஹித் (13), கோலி(0), தவான்(10) ஆகிய மூவரும் முதல் 10 ஓவர்களுக்காகவே ஆட்டமிழக்க, 42 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
4ம் வரிசையில் இறங்கி சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 111 பந்தில் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சதமடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களில் ஆட்டமிழந்து சத வாய்ப்பை நழுவவிட்டார். அதன்பின்னர் தீபக் சாஹர் அடித்து ஆடி 38 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 265 ரன்கள் அடித்தது இந்திய அணி.
266 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முகமது சிராஜ் ஷேய் ஹோப்பை 5 ரன்னில் வீழ்த்த, அதன்பின்னர் பிரண்டன் கிங் மற்றும் ப்ரூக்ஸ் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் தீபக் சாஹர். டேரன் பிராவோவை 19 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, ஹோல்டர்(6), ஃபேபியன் ஆலன்(0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிகோலஸ் பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களான ஒடீன் ஸ்மித்(36), அல்ஸாரி ஜோசஃப்(29), ஹைடன் வால்ஷ்(13) சிறு சிறு பங்களிப்பு செய்தனர். ஆனாலும் அவர்கள் யாரையும் களத்தில் நிலைக்கவிடாமல் இந்திய பவுலர்கள் வீழ்த்தியதால், 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதையடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.