ஐபில் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் முதல் முறையாக துபாயில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் திருவிழா நடத்தப்பட்டது. அந்த வகையில் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 16ஆவது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது.
இதையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் வெளிநாடுகளில் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஐபிஎல் தலைவர் மறுப்பு தெரிவித்து இந்தியாவில் தான் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் கொச்சியில் நடந்தது. இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் முதல் முறையாக வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது. அதுவும் துபாயில் முதல் முறையாக ஐபிஎல் நடக்க இருக்கிறது.
வரும், டிசம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க இருக்கிறது. அப்போது தான் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியும் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இந்தியாவை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!
இந்த ஐபிஎல் தொடருக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் அணி சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தங்களது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் மும்பை இந்திய அணிக்கு லசித் மலிங்கா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் 156 ரன்கள் எடுத்து மோசமான சாதனையில் இடம் பிடித்த இங்கிலாந்து!
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். ஷேன் பாண்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இணைந்துள்ளார். தற்போது இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்ய ரூ.100 கோடி வரையில் செலவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இது ரூ.95 கோடியாக இருந்தது. தற்போது ரூ.5 கோடி வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ENG vs SL: அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டரை களமிறக்கிய இலங்கை; இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
ஒவ்வொரு அணியும் ஏல நாளில் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பது 2023 ஏலத்தில் இருந்து செலவழிக்கப்படாத தொகையை தவிர, அவர்கள் வெளியிடும் வீரர்களின் மதிப்பைப் பொறுத்து அமையும். இதுவரையில் செலவழிக்கப்படாத தொகையாக ஒவ்வொரு அணியும் எவ்வளவு வைத்திருக்கிறது என்று பார்த்தால் பஞ்சாப் கிங்ஸ் தான் அதிகபட்சமாக ரூ.12.20 கோடி வரையில் வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 0.05 கோடி உள்ளது. மீதமுள்ள அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.6.55 கோடி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இரண்டும் ரூ.4.45 கோடி வைத்துள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.3.55 கோடி; ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 3.35 கோடி; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ.1.75 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 1.65 கோடி மற்றும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடி வைத்துள்ளது. துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய வீரர்களும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.