ஐபிஎல்லில் முதல் முறையாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோனார் சாம் கரன். சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணியும், நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஏலத்தில் எடுத்தன.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவரான கேன் வில்லியம்சனை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாத நிலையில், அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
டாம் பாண்ட்டன், ஆடம் மில்னே, ராசி வாண்டர்டசன், ஜிம்மி நீஷம், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான், டப்ரைஸ் ஷம்ஸி, டேரைல் மிட்செல் ஆகிய சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்கள் விலைபோகவில்லை. ஷகிப் அல் ஹசன், ரைலீ ரூசோ ஆகியோர் முதற்கட்ட ஏலத்தில் விலைபோகவில்லை. 2ம் கட்ட ஏலத்தில் அவர்களை அணிகள் எடுத்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்து, ஏலத்தில் விலைபோகாமல் ஏமாற்றமடைந்து வந்த ஜோ ரூட், ஐபிஎல்லில் முதல் முறையாக இந்த சீசனில் விலைபோனார். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவர் மீது டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற முத்திரை இருந்ததால் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க விரும்பியதில்லை. அவரது ஸ்டிரைக் ரேட் மீது கொண்ட சந்தேகத்தால் அணிகள் அவரை புறக்கணித்துவந்தன.
ஆனால் ரூட் மாதிரியான வீரர்கள் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்ப்பார்கள். ஒருமுனையில் நிலைத்து ஆடி, மறுமுனையில் வீரர்கள் அடித்து ஆட உதவுவார்கள். அந்தவகையில், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் விலைபோன ரூட் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
IPL 2023 Auction: சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..! முத்தையா முரளிதரன் தகவல்