இந்த லெட்சணத்துல ஆடுனா எப்படி ஜெயிக்க முடியும்..? சீனியர் வீரரை விளாசிய விராட் கோலி

By karthikeyan VFirst Published Feb 28, 2020, 10:46 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சில இந்திய வீரர்களின் அணுகுமுறையை கேப்டன் விராட் கோலி கடுமையாக சாடினார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சரியில்லை. 

பேட்டிங்கில் மயன்க் அகர்வாலும் பவுலிங்கில் இஷாந்த் சர்மாவும் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இருவரது ஆட்டம் வெற்றிக்கு உதவவில்லை. சீனியர் வீரர்களான கோலி, புஜாரா, ரஹானே மற்றும் நட்சத்திர பவுலர் பும்ரா ஆகியோர் சோபிக்காததால் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்தது பெரிய விஷயமல்ல. ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் தோற்ற விதம் படுமோசமானது. அதுதான் பெரும் வேதனையளித்தது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் மந்தமான பேட்டிங்கை கேப்டன் கோலி கடுமையாக சாடியுள்ளார். 

புஜாரா பொதுவாகவே மெதுவாக ஆடக்கூடியவர். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுகவேண்டும். அதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. முதல் இன்னிங்ஸ் முடிவில் 183 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணிக்கு, இரண்டாவது இன்னிங்ஸில் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற அணுகுமுறையை விட, ஸ்கோர் செய்வதற்காக ஆடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதுவும் மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டதால், எஞ்சிய இரண்டரை நாட்களும் தடுப்பாட்டம் ஆடி தோல்வியை தவிர்ப்பது சாத்தியமில்லாத விஷயம். எனவே ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்க வேண்டும்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா படுமோசமாக ஆடினார். 28 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. ரன் கணக்கை தொடங்கவே 5 ஓவர்கள் எடுத்துக்கொண்டார். மொத்தமாக 81 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனமில்லாத ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு சென்றார். அதேபோல ஹனுமா விஹாரியும் 79 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இவர்களின் பேட்டிங் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த விராட் கோலி, மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் ஆடுவது எந்தவகையிலும் பயனளிக்காது. அந்த எச்சரிக்கை உணர்வு, உங்களை ஷாட் ஆடுவதிலிருந்து தடுக்கும். சிங்கிள் கூட எடுக்காமல் ஆடினால், என்ன தான் செய்வது? நீங்கள் காத்துக்கொண்டே இருந்தீர்களானால், ஒரு நல்ல பந்தில் கண்டிப்பாக ஆட்டமிழந்துவிடுவீர்கள். ஆடுகளம் பசுமையாக இருந்தால், நான் அடித்து ஆட வேண்டும் என்றுதான் விரும்புவேன். அப்படி நான் அடித்து ஆடினால் தான் அணியை முன்னோக்கி நகர்த்த முடியும்.

Also Read - பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் காட்டடி.. வீடியோ

வெளிநாடுகளில் ஆடும்போது அதீத எச்சரிக்கையுடன், தடுப்பாட்டம் ஆடுவது எந்தவகையிலும் உதவாது. கண்டிஷனை பற்றி அதிகமாக சிந்தித்தால், பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது. வெளிநாடுகளில் ஆடும்போது, அது பெரும்பாலும் நமது மனவலிமைக்கான தேர்வாகவே இருக்கும். எனவே கண்டிஷனை பற்றி ஓவரா சிந்திக்காமல், அணுக வேண்டும். அதேபோல டெக்னிக்கலாகவும் ரொம்ப விவாதிக்க தேவையில்லை. நமது மனது தெளிவாக இருந்தால், எந்த கண்டிஷனும் ஈசியாகத்தான் இருக்கும் என்று கோலி தெரிவித்தார். 
 

click me!