ஐபிஎல் 2020: அதிரடியாக கேப்டனை மாற்றிய சன்ரைசர்ஸ்.. கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட வில்லியம்சன்

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 5:05 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனை அதிரடியாக மாற்றியுள்ளது.
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவித்து மீண்டும் டேவிட் வார்னரையே கேப்டனாக நியமித்துள்ளது. 

டேவிட் வார்னர் தான் 2015ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்தார். 2015, 2016 மற்றும் 2017 ஆகிய 3 சீசன்களிலும் வார்னர் தான் சன்ரைசர்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தினார். இதில் 2016 ஐபிஎல் டைட்டிலை வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி வென்றது. 

2018 ஐபிஎல்லுக்கு முன், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் தடை பெற்றதால், அந்த சீசனில் அவர் ஆடவில்லை. அதனால் கேன் வில்லியம்சன் அந்த சீசனில் கேப்டனாக செயல்பட்டார். வில்லியம்சனின் தலைமையில் 2018 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணி, இறுதி போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

இதையடுத்து கடந்த சீசனிலும் வில்லியம்சன் தான் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில், கடந்த சீசனில் பேர்ஸ்டோவும் வார்னரும் தொடக்க வீரராக இறங்கியதால், ஸ்பின்னர்களாக முகமது நபியும் ரஷீத் கானும் ஆடியதால், வில்லியம்சனுக்கு பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அந்த போட்டிகளில் எல்லாம் புவனேஷ்வர் குமார் தான் கேப்டனாக செயல்பட்டார். 

ஐபிஎல்லில் ஒரு அணியில், ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டும் தான் சேர்க்கமுடியும் என்பதால், வார்னர், பேர்ஸ்டோ, நபி, ரஷீத் கான் ஆகிய நால்வரும் ஆடுவதால் வில்லியம்சனுக்கு இடம் கிடைப்பது கடினமே. எனவே அடுத்த சீசனுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வார்னரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

click me!