கேகேஆர் அணி வீரர் ஐபிஎல்லில் ஆட தடை.. பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 3:53 PM IST
Highlights

ஐபிஎல்லில் 13வது சீசனுக்கான ஏலத்தில் கேகேஆர் அணி எடுத்த வீரர் ஒருவருக்கு ஐபிஎல்லில் ஆட பிசிசிஐ அதிரடியாக தடை விதித்துள்ளது. 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. 

இந்த ஏலத்தில் கேகேஆர் அணி 48 வயதான இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் டாம்பேவை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிக மூத்த வீரர் என்ற தனது பழைய சாதனையை தானே தகர்த்தார். 

பிரவீன் டாம்பே ஐபிஎல்லில் 42 வயதில் தான் அறிமுகமே ஆனார். 2013, 2014, 2015 ஆகிய மூன்று சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2016ல் குஜராத் லயன்ஸ் அணியிலும் 2017ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் ஆடினார். அவர் ஐபிஎல்லில் 33 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 2017ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில்,  அவர் ஐபிஎல்லில் ஆட பிசிசிஐ அதிரடியாக தடை விதித்துள்ளது. ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் ஆடமுடியாது என்பது பிசிசிஐ விதி. ஆனால் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடலாம். யுவராஜ் சிங்கெல்லாம் கனடா பிரீமியர் லீக்கில் ஆடினார். அதுபோல, வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடலாமே தவிர, ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் ஆடமுடியாது. 

Also Read - இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்.. கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கட்டாய மாற்றம்

எனவே பிரவீன் டாம்பே ஐபிஎல்லில் ஆட தடைவிதித்த பிசிசிஐ, இந்த தகவலை கேகேஆர் அணிக்கும் தெரிவித்துவிட்டது. 

கேகேஆர் அணி:

தக்கவைத்த வீரர்கள்: 

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, சித்தேஷ் லத்(மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பெறப்பட்டவர்). 

ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள்: 

பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், பிரவீன் டாம்பே, சித்தார்த் மணிமாறன்.
 

click me!