#INDvsENG ஹர்திக் பாண்டியாவை பந்துவீசவைக்காதது ஏன்..? கேப்டன் கோலி விளக்கம்

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 9:45 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ், க்ருணல் பாண்டியாவின் பவுலிங்கை இங்கிலாந்து வீரர்கள் அடி துவம்சம் செய்தபோதிலும், ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு ஓவர் கூட கொடுக்காதது ஏன் என கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 336 ரன்களை குவித்தும், அந்த இலக்கை 44வது ஓவரிலேயே இங்கிலாந்தை அடிக்கவிட்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

அந்த போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய 2 ஸ்பின்னர்களின் பவுலிங்கையும் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அடித்து நொறுக்கிவிட்டனர்.

க்ருணல் பாண்டியா 6 ஓவரில் 72 ரன்களையும், குல்தீப் 10 ஓவரில் 84 ரன்களையும் வாரி வழங்கினர். குல்தீப் மற்றும் க்ருணல் பாண்டியாவின் பவுலிங்கில் சிக்ஸர் மழை பொழிந்துதான் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும். அவர்கள் கொஞ்சம் ரன்னை கட்டுப்படுத்தியிருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

ஆனால் க்ருணல் மற்றும் குல்தீப்பின் பவுலிங்கில் ரன்கள் நிறைய போனபோதிலும் கூட, 6வது பவுலிங் ஆப்சனாக இருந்த ஹர்திக் பாண்டியாவிடம் கோலி பந்தை கொடுக்கவேயில்லை. ரன் அதிகமாக சென்றுகொண்டிருந்தபோது, இடையில் சில ஓவர்கள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள கேப்டன் கோலி, ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலையும் ஃபிட்னெஸூம் முக்கியம். அதை மனதில் வைத்து செயல்படுவது முக்கியம். அவர் பேட்டிங்குடன் சேர்த்து எப்போது பந்துவீச வைக்க வேண்டுமோ அப்போது அதை செய்வோம். டி20 கிரிக்கெட்டில் அவரை பந்துவீசவைத்தோம். ஹர்திக் பாண்டியா ஃபிட்டாகவும் வலுவாகவும் இருக்க வேண்டியது அணிக்கு அவசியம் என்று கோலி தெரிவித்தார்.
 

click me!