அவன் சரியா வரமாட்டான்; அவனை முதல்ல டீம்ல இருந்து தூக்குங்க..! கவாஸ்கர் வலியுறுத்தும் முக்கியமான மாற்றம்

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 7:07 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் க்ருணல் பாண்டியா கண்டிப்பாக 5வது பவுலராக இருக்க சரியான வீரர் இல்லை என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது. எனவே தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடக்கவுள்ளது.

இந்நிலையில், அந்த போட்டியில் ஐந்தாவது பவுலராக க்ருணல் பாண்டியாவை ஆடவைப்பது குறித்து இந்திய அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் ஸ்பின்னர்கள் தான் பயங்கரமாக அடிவாங்கினர். க்ருணல் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுகின்றனர். வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோர் ஆடவில்லை. வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காதது பெரிய விஷயமல்ல. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பிரதான ஸ்பின்னராக இருந்த சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்விளைவாக, இந்திய ஸ்பின்னர்களை அடி வெளுத்துவாங்கினர் இங்கிலாந்து வீரர்கள். க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் சிக்ஸர் மழை பொழிந்தனர். க்ருணல் பாண்டியா 6 ஓவரில் 72 ரன்களையும், குல்தீப் 10 ஓவரில் 84 ரன்களையும் வாரி வழங்கினர்.

க்ருணல் பாண்டியா பேட்டிங்கும் ஆடக்கூடிய ஸ்பின்னர் என்பதால்தான் அவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது முதன்மை பணி பேட்டிங்கா, பவுலிங்கா என்பதை இந்திய அணி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்திய அணியின் பவுலிங் பலவீனமாக உள்ளது. க்ருணல் பாண்டியா கண்டிப்பாக 5வது பவுலராக இருக்க சரியான வீரர் அல்ல. 10 ஓவர்களையும் முழுமையாக வீசக்கூடிய பவுலர் அவர் கிடையாது. புனே மாதிரியான பிட்ச்களில் யுஸ்வேந்திர சாஹல் ஆடவேண்டும்.

பாண்டியா பிரதர்ஸ் இணைந்து 10 ஓவர்கள் வீசினாலும், இந்திய அணி கடைசி போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே அணியின் 4,5 மற்றும் 6வது பவுலர்கள் யார் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

சாஹல் மற்றும் ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் கொடுக்கமளவிற்கான நெருக்கடியை ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவிற்கு, க்ருணல், குல்தீப்பால் கொடுக்கவே முடியாது. க்ருணல் பாண்டியா 7வது பேட்டிங் ஆர்டரில் தான் ஆடப்போகிறார் என்றால், பேட்டிங் ஆடக்கூடிய ஸ்பின்னராக பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அந்த பேட்டிங் ஆர்டர் அவருக்கு சரியானதா? அப்படியில்லாமல் அவர் 5ம் வரிசையில் பேட்டிங் ஆடும் பேட்ஸ்மேன், 4-5 ஓவர்கள் வீசப்போகிறார் என்றால், அவரால் ஆறாவது பவுலராக இருக்க முடியாது. ஏனெனில் ஹர்திக் பாண்டியா தான் ஆறாவது பவுலர். எனவே 5 தரமான பவுலர்களுடன் இந்திய அணி ஆட வேண்டும். க்ருணல் 5வது பவுலர் கிடையாது என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!