#INDvsENG தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள்: இந்திய அணி அந்த ஒரு மாற்றத்தை கண்டிப்பா செஞ்சே தீரணும்..!

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 9:04 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. கடைசி போட்டியில் வெற்றி கட்டாயத்தில் ஆடுவதால் இந்திய அணி ஸ்பின் காம்பினேஷனில் மாற்றம் செய்தே தீர வேண்டும்.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் ஸ்பின்னர்கள் தான் பயங்கரமாக அடிவாங்கினர். க்ருணல் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுகின்றனர். வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோர் ஆடவில்லை. வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காதது பெரிய விஷயமல்ல. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பிரதான ஸ்பின்னராக இருந்த சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்விளைவாக, இந்திய ஸ்பின்னர்களை அடி வெளுத்துவாங்கினர் இங்கிலாந்து வீரர்கள். க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் சிக்ஸர் மழை பொழிந்தனர். க்ருணல் பாண்டியா 6 ஓவரில் 72 ரன்களையும், குல்தீப் 10 ஓவரில் 84 ரன்களையும் வாரி வழங்கினர்.

எனவே ஸ்பின் காம்பினேஷனில் மாற்றம்செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜாவும் அதையே தான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரமீஸ் ராஜா, இந்திய அணி பவுலிங் ரிசோர்ஸை பற்றி யோசித்தாக வேண்டும். ஸ்பின் பவுலிங் காம்பினேஷனில் கவனம் செலுத்த வேண்டும். குல்தீப் யாதவ் சரியாக வீசுவதில்லை. க்ருணல் பாண்டியா இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் வீசுமளவிற்கு முதிர்ச்சியடையவில்லை. இந்திய அணி விக்கெட் எடுத்தாக வேண்டும்; அதற்கு சாஹலை அணியில் எடுக்க வேண்டும் என்று ரமீஸ் ராஜா தெரிவித்துளார்.
 

click me!