#ENGvsIND ரிஷப் பண்ட் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காத கேப்டன் கோலி..! செம கடுப்பான ரிஷப்.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Aug 14, 2021, 4:45 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 2 டி.ஆர்.எஸ்களை வீணடித்தது. அதில் ஒன்று, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காமல் கேப்டன் விராட் கோலி ரிவியூ எடுத்து வீணடித்தார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான தோனி ஆடியவரை, ரிவியூ எடுப்பதில் இந்திய அணிக்கு எந்த சிக்கலும் இருந்ததில்லை. ரிவியூ எடுக்கும் அழுத்தம் கேப்டன் கோலிக்கும் இருக்காது. ஏனெனில் விக்கெட் கீப்பர் தோனி ரிவியூ எடுக்க சொன்னால் எடுக்கப்படும்; அவர் வேண்டாம் என்றால் எடுக்கப்படாது. இதுதான் தோனி இருந்தவரை இந்திய அணியின் நிலையாக இருந்தது.

ஆனால் தோனி ஓய்வுக்கு பிறகு, விராட் கோலி ரிவியூ எடுப்பதில் சொதப்பிவருகிறார். ரிஷப் பண்ட்டின் ஆரம்பக்கட்டத்தில் அவர் ரிவியூ குறித்த முடிவு எடுப்பதில் தெளிவில்லாமல் இருந்தார். அதனால் தவறான ரிவியூக்கள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு, தனது அனுபவங்களின் மூலமாக மேம்பட்டுள்ளார். இப்போது பெரும்பாலும் ரிவியூக்கள் எடுப்பது தொடர்பாக, கேப்டன் கோலிக்கு சரியான ஆலோசனைகளை வழங்குகிறார். ஒருசில முறை தவறுகள் நடந்தாலும், அவை ஒருசில முறையே.

களத்தில் மற்ற வீரர்களை காட்டிலும், விக்கெட் கீப்பருக்குத்தான் வியூ மிகத்தெளிவாக இருக்கும். எனவே ரிவியூ விவகாரத்தில், விக்கெட் கீப்பர் மீது நம்பிக்கை வைத்து அவரது கருத்துக்கு, கேப்டன் மரியாதை கொடுத்தால்தான் அவருக்கு தன்னம்பிக்கை வரும். ஆனால் கோலியோ, ரிஷப் பண்ட்டின் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ரிவியூ எடுத்து வீணடித்தார்.

பவுலர்கள், பேட்ஸ்மேன்களின் கால்காப்பில் பட்டாலே, விக்கெட்டுக்காக ஆவேசமாகவும், பேரார்வத்துடனும் அப்பீல் செய்வது வழக்கம் தான். அதிலும் இளம் பவுலரான முகமது சிராஜ், ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு கேப்டனை ரிவியூ எடுக்க தூண்டுகிறார். 

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சிராஜ் வீசிய 21வது ஓவரின் கடைசி பந்து ரூட்டின் கால்காப்பில் பட்டது. அம்பயர் அவுட் கொடுக்க மறுக்க, அதற்கு ரிவியூ எடுக்குமாறு கேப்டன் கோலியிடம் வலியுறுத்தினார் சிராஜ். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ஆமோதிக்க, ரிவியூ செய்தார் கேப்டன் கோலி. ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றது. இதையடுத்து ஒரு இன்னிங்ஸுக்கான 3 ரிவியூக்களில் ஒன்றை இழந்தது இந்திய அணி.

சிராஜின் அடுத்த ஓவரிலேயே மீண்டும் பந்து ரூட்டின் கால்காப்பில் பட, சிராஜ் மீண்டும் ரிவியூ எடுக்க சொன்னார். ஆனால் இம்முறை பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றுவிடும் என்பதை சரியாக கணித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கேப்டன் கோலியிடம் ரிவியூ எடுக்க வேண்டாம் என்றார். ஆனால் கோலியோ ரூட்டின் விக்கெட் எப்படியாவது கிடைத்துவிடாதா என்ற ஆர்வத்தில் ரிவியூ எடுக்கும் முனைப்பில் இருந்தார். கோலியின் எண்ணத்தை அறிந்த ரிஷப், உறுதியாக வேண்டாம் என்றார். ஆனால் ரிஷப் பேச்சை கேட்காத கோலி ரிவியூ எடுத்தார். அவர் ரிவியூ எடுக்கப்போகும்போது கூட, கையை தட்டிவிட முயன்றார் ரிஷப். அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.

Mohammad Siraj convinced Virat Kohli to take the review of Joe Root, but Rishabh Pant was denying. pic.twitter.com/4XCXsz8prI

— Sanjay (@Iamsanjayvg)

ஆனால் அந்த பந்தும் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றதால், இந்தியா 2 ரிவியூக்களை வீணாக இழந்தது.
 

click me!