ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ருதுராஜ் கெய்க்வாட், கலீல் அகமது நீக்கப்பட்டு ரியான் பராக் மற்றும் முகேஷ் குமார் இருவரும் அணியில் இடம் பெற்றனர். இதையடுத்து இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சிக்கந்தர் வீசினார்.
இந்த ஓவரில் முதல் மற்றும் 2ஆவது பந்தில் சிக்ஸர் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆவது பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து வந்த அபிஷேக் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 14 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 13 ரன்களில் நடையை கட்டினார். முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 10 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமான் கெய்க்வாட் – ரூ.1 கோடி நிதியுதவி அளித்த ஜெய் ஷா!
எனினும், ரியான் பராக் 22 ரன்களில் நடையை கட்டவே, சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அப்போது 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் குவித்தது. இதில், ஷிவம் துபே 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 26 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கடைசியில் ரிங்கு சிங் 11 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னும் எடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜிம்பாப்வே அணியில் பிளெசிங் முசரபாணி 2 விக்கெட்டும், சிக்கந்தர் ராஸா, ரிச்சர்டு ங்கரவா மற்றும் பிராண்டன் மவுடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
TNPL 2024, LKK vs NRK: அதிரடியாக விளையாடிய சச்சின் – லைகா கோவை கிங்ஸ் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றி!