ரத்த புற்றுநோயுடன் போராடி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டிற்கு மருத்துவத்திற்கு நிதியுதவி வழங்குமாறு பிசிசிஐயிடம் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ரன்களும், 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்களும் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். இது தவிர 1990 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது வழிகாட்டுதலில் இந்திய அணி கோகோ கோலா டிராபியை கைப்பற்றியிருக்கிறது.
TNPL 2024, LKK vs NRK: அதிரடியாக விளையாடிய சச்சின் – லைகா கோவை கிங்ஸ் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றி!
மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது 71 வயதாகும் அன்ஷுமான் கெய்க்வாட் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு ஆதரவாக கபில் தேவ் களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக கபில் தேவ் கூறியிருப்பதாவது: இது மன வேதனை அளிக்கிறது. நான் அன்ஷுவுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். அவரை இந்த நிலையில் பார்க்க சகிக்க முடியாமல் வேதனையில் இருக்கிறேன். யாருமே கஷ்டப்படக் கூடாது. பிசிசிஐ அவரை கவனித்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும்.
மேலும், யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவருக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும் அது உங்களது இதயத்திலிருந்து வர வேண்டும். அவர் வேகப்பந்தை எதிர்கொண்ட போது இந்திய நாட்டிற்காக முகத்திலும், மார்பிலும் அடி வாங்கியிருக்கிறார். இந்த தருணத்தில் நாம் அவருக்காக நிற்க வேண்டும். ரசிகர்கள் அவரை கைவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு காலத்தில் பிசிசிஐயிடம் போதுமான பணம் இல்லை. ஆனால், இப்போது அவர்களிடம் தேவையான பணம் இருக்கிறது. அறக்கட்டளை ஒன்று உருவாக்கி முன்னாள் வீரர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் முன்னாள் வீரர்களுக்கு என்று அறக்கட்டளை தொடங்கி முன்னாள் வீரர்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
அதோடு, எனது பென்ஷன் தொகையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். மற்ற வீரர்களும் அவர்களது குடும்பத்தின் அனுமதியோடு கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் பிசிசிஐ தற்போது அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு பிசிசிஐ உதவிக்கரம் நீட்டியுள்ளது. அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குமாறு அபெக்ஸ் கவுன்சில் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு, அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்த அணுகி தேவையான உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.