இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு ஃபிட்டானதால், இந்த போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. மேட் ரென்ஷாவுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டும், ஸ்காட் போலந்துக்கு பதிலாக ஸ்பின்னர் குன்னெமனும் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அஷ்வின், ஷமி, சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் 15 ரன்னுக்கும், லபுஷேன் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். சீனியர் வீரர் ஸ்மித் ரன்னே அடிக்காமல் அஷ்வின் சுழலில் டக் அவுட்டானார். ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகிய 2 ஆஸி., நட்சத்திர வீரர்களையும் அஷ்வின் வீழ்த்தினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களை குவித்து ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தார். சதமடிக்கும் வாய்ப்பை கவாஜா தவறவிட்டார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னுக்கு ஷமியும், அலெக்ஸ் கேரியை ரன்னே அடிக்கவிடாமல் அஷ்வினும் வீழ்த்தினர். கேப்டன் பாட் கம்மின்ஸ் 33 ரன்களுக்கு ஜடேஜாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா கார் மீது தாக்குதல்..! போலீஸார் வழக்குப்பதிவு
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.