
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.
India vs New Zealand, Mohammed Shami: 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி வரலாற்று சாதனை!
பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோட் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 181 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசியாக நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, குறிப்பிடத்தக்க பாணியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அருமையான பேட்டிங்கும், நல்ல பந்துவீச்சும் எங்கள் அணிக்கு போட்டியை சீல் வைத்தது. இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய அரையிறுதிப் போட்டியானது சிறப்பான தனிப்பட்ட ஒருவருக்காக நன்றி செலுத்தியது. தனது சிறப்பான பந்து வீச்சு மூலமாக முகமது ஷமி இந்த போட்டியில் மட்டுமின்றி உலகக் கோப்பையின் மூலமாகவும் கிரிக்கெட் பிரியர்களால் தலைமுறை தலைமுறையாக போற்றப்படுவார். ஷமி நன்றாக விளையாடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.