டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதின. பெர்த்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.
undefined
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் (15) மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில்(5வது ஓவரில்) வீழ்த்திய லுங்கி இங்கிடி, தனது அடுத்தடுத்த ஓவர்களில் கோலி (12) மற்றும் ஹர்திக் பாண்டியா(2) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தீபக் ஹூடாவை 2 ரன்னில் நோர்க்யா வீழ்த்த, இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, மந்தமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 15 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யகுமாருடன் 7 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தினேஷ் கார்த்திக். அடித்து ஆடி 30 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 133 ரன்கள் அடித்தது இந்திய அணி.
134 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான மற்றும் ஃபார்மில் உள்ள வீரர்களான குயிண்டன் டி காக் (1) மற்றும் ரைலீ ரூசோ (0) ஆகிய இருவரையும் 2வது ஓவரில் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். ஃபார்மில் இல்லாத பவுமா கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 10 ரன்கள் அடித்து ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய தென்னாப்பிரிக்க அணியை அவ்வளவு எளிதாக இந்திய பவுலர்கள் ரன் அடிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இந்திய அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மார்க்ரம் - மில்லர் பார்ட்னர்ஷிப் அமைக்க, அந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, அதற்கு கிடைத்த அருமையான வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டது. 9வது ஓவரின் 5வது பந்தில் மார்க்ரமை ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட ரோஹித் சர்மா, 13வது ஓவரில் மில்லரை ரன் அவுட் செய்ய கிடைத்த எளிய வாய்ப்பை தவறவிட்டார். 12வது ஓவரில் அஷ்வின் பவுலிங்கில் மார்க்ரம் கை மேல் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டு அதிர்ச்சியளித்தார் கோலி.
மீண்டும் 15வது ஓவரின் 5வது பந்தில் அர்ஷ்தீப்பின் பவுலிங்கில் மார்க்ரம் கொடுத்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியாவும் கோலியும் பிடிக்க முயன்று இருவரும் யார் பிடிப்பது என்ற தெளிவில்லாமல் கேட்ச்சை கோட்டைவிட, அதில் 2 ரன் ஓடி அரைசதம் அடித்த மார்க்ரம், 52 ரன்னில் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மில்லர் - மார்க்ரம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்களை குவிக்க, மில்லரும் அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி க்ரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்திய அணி அடித்த ஸ்கோர் குறைவாக இருந்தாலும், பவுலர்களின் அபாரமான பவுலிங்கால் ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை மட்டமான ஃபீல்டிங்கால் கோட்டைவிட்டது இந்திய அணி.