#ENGvsIND 2வது பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி..! அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. செம குஷியில் இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Aug 13, 2021, 4:01 PM IST
Highlights

 2வது டெஸ்ட்டின் 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே கேஎல் ராகுல் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரும் ஆட்டமிழந்ததையடுத்து, இந்த போட்டியில் செம கம்பேக் கொடுத்துள்ளது இங்கிலாந்து அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா களத்தில் கொஞ்சம் செட்டில் ஆனபின்னர், அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். அடித்து ஆடிய ரோஹித் சர்மா 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

புஜாரா 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடியபோது, களத்தில் நிதானம் காத்து ஆடிய ராகுல், நன்றாக செட்டில் ஆனார். ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, அதிரடியாக ஆட ஆரம்பித்த ராகுல் சதமடித்தார். ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கோலி, அரைசதத்தை 8 ரன்னில் தவறவிட்டு 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அபாரமாக ஆடிய ராகுல் 127 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்திருந்தது.

களத்தில் நன்றாக செட்டில் ஆகி சதமடித்திருந்த ராகுலும் ரஹானேவும் 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ராபின்சன் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ராகுல், அடுத்த பந்தை கவர் டிரைவ் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்றும் பெரிய இன்னிங்ஸ் ஆடி பெரிதாக ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே 129 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதற்கடுத்த ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் ரஹானே வெறும் ஒரு ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 282 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் சேர்ந்து ஆடிவருகின்றனர்.
 

click me!