T20 World Cup:ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஷமிக்கு கடைசி ஒருஓவரை மட்டும் கொடுத்தது ஏன்? ரோஹித் விளக்கம்

By karthikeyan VFirst Published Oct 17, 2022, 10:32 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் முகமது ஷமியை கடைசி ஒரு ஓவரை மட்டும் வீசவைத்தது ஏன் என்று கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்தார்.
 

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு. பவர்ப்ளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் அனைத்து சூழல்களிலும் அபாரமாக பந்துவீசக்கூடியவர் பும்ரா.  அவர் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் ஸ்பின் பவுலிங் சிறப்பாக உள்ளது. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அண்மைக்கால போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதால் டெத் ஓவர் குறித்த பயமும் கவலையும் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் இருந்தது.

இதையும் படிங்க - ஷமி Bhai, உங்களோட சீம் பவுலிங்கிற்கு நான் பெரிய ரசிகன்.! ஷாஹீன் அஃப்ரிடி - ஷமி உரையாடல்.. வைரல் வீடியோ

இந்நிலையில், ஷமி அந்த பிரச்னைக்கு தீர்வு கொடுத்து நம்பிக்கையளித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேஎல் ராகுல் (57) மற்றும் சூர்யகுமார் யாதவ்(50) ஆகிய இருவரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது.

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 176 ரன்கள் அடித்திருந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 ஓவரில் ஒரு ஓவர் கூட பந்துவீசிராத ஷமியிடம் நேரடியாக கடைசி ஓவரை கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

ஓராண்டாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடாத ஷமியிடம் பந்தை கொடுத்து 11 ரன்னை கட்டுப்படுத்தும் டாஸ்க்கை கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அபாரமாக பந்துவீசிய ஷமி துல்லியமான யார்க்கர்களை வீசி ஆஸ்திரேலியாவை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினார். முதல் 2 பந்தில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ஷமி, அடுத்த 4 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோக ஒரு ரன் அவுட். கடைசி 4 பந்தில் 4 விக்கெட்டுகள் விழ, இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் டெத் பவுலிங் தான் பிரச்னையாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், ஷமியின் ஒரு ஓவர் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளது. இந்த ஒரு ஓவர் மூலம், இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் ஷமி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சிக்கந்தர் ராசா அதிரடி அரைசதம்.. தகுதிப்போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

இந்நிலையில், ஷமிக்கு 19 ஓவரில் ஒரு ஓவர் கூட கொடுக்காமல் கடைசி ஓவரை மட்டும் கொடுத்தது ஏன் என்பது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறார். அவர் புதிய பந்தில் எவ்வளவு சிறப்பாக வீசுவார் என்பது நாம் அறிந்ததுதான். எனவே அவருக்கு டெத் ஓவர் சவாலை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடைசி ஓவர் மட்டும் வழங்கப்பட்டது. அந்த கடைசி ஒரு ஓவரிலும் அவரால் என்ன செய்யமுடியும் என்று பார்த்தோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!