யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும்.. எங்க சப்போர்ட் உனக்குத்தான்! ராகுலுக்கு கேப்டன் ரோஹித், கோச் டிராவிட் ஆதரவு

By karthikeyan V  |  First Published Feb 19, 2023, 6:26 PM IST

ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தேர்வு குறித்து ஒரு குழப்பம் தான் இருந்தது. அதாவது, இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைசதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படுவாரா அல்லது கேஎல் ராகுல் இறக்கப்படுவாரா என்பதுதான் அந்த கேள்வி.

Tap to resize

Latest Videos

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர்தான் துணை கேப்டனும் கூட. அதனால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார் ராகுல்.

ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

இதையடுத்து அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ராகுலை கடுமையாக விமர்சித்தது, முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் ராகுல் வெறும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2022லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். அதை சுட்டிக்காட்டி மீண்டும் மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

ராகுலை 2வது டெஸ்ட்டில் ஆடவைக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்த நிலையில், ராகுலை நீக்குவதற்கு முன் இன்னுமொரு போட்டியில் வாய்ப்பளிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால் 2வது டெஸ்ட்டிலும் ராகுல் (17, 1) சொதப்பினார். இதையடுத்து வெங்கடேஷ் பிரசாத் மேலும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். ராகுல் மீது மட்டுமல்லாது ராகுலை தொடர்ந்து ஆடவைக்கும் இந்திய அணி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார். 

ராகுல் குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், இந்தியாவின் 2வது சிறந்த தொடக்க வீரர் (ரோஹித்துக்கு அடுத்து) ராகுல் தான் என்று இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது. அவர் தான் நாட்டின் சிறந்த ஓபனர் என்று நினைக்கின்றனர். அவரது தேர்வு அநீதி. கடந்த 5 ஆண்டுகளில் 47 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 27. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது, இந்தியாவில் வேறு திறமைசாலிகளே இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்தார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலோ அல்லது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலோ ஆடி நிறைய ரன்கள் ஸ்கோர் செய்து இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் வலியுறுத்தியிருந்தார்.

வெங்கடேஷ் பிரசாத் மட்டுமல்லாது மற்றும் சில முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ராகுல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன் அவரை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

ராகுல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இந்த சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை

ராகுல் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ராகுல் பேட்டிங் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் திறமையான வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்கிலாந்தின் லார்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் ஆகிய மைதானங்களில் சதமடித்தவர் ராகுல். அவரது திறமையின் மீது சந்தேகமேயில்லை. எனவே அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவளிக்கும் என்றார் ரோஹித் சர்மா.

ராகுல் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வெளிநாடுகளில் இந்திய அணியின் வெற்றிகரமான ஓபனர் ராகுல். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் சதமடித்திருக்கிறார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்போம். இந்த கடினமான காலத்திலிருந்து மீண்டு வருவதற்கான திறமையும், தரமும், கிளாஸும் அவரிடம் இருக்கிறது என்றார் ராகுல் டிராவிட்.
 

click me!