பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. நேற்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியின் போதும் மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. பின்னர், ஆடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் அடித்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 122 ரன்னுடனும், கேஎல் ராகுல் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இமாம் உல் ஹாக் 9 ரன்னில் பும்ரா பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
இதையடுத்து அகா சல்மான் களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக மற்றொரு தொடக்க வீரர் ஃபஹர் ஜமான் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக அகா சல்மான் ஆட்டமிழந்தார். இவர், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து முகத்தில் ரத்த காயமடைந்த நிலையில், குல்தீப் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு வந்த ஷதாப் கானும் குல்தீப் பந்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆனால், அடுத்து 9 ரன்களுக்குள் இஃப்திகார் அகமது 23 ரன்களில் குல்தீப் யாதவ் ஓவரில் அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடையாக ஹரிஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா பேட்டிங் ஆட வராத நிலையில், பாகிஸ்தான் 32 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
India vs Pakistan: வேலையை காட்டிய மழை; என்ன சோனமுத்தா போச்சா…. இப்போ மழையா? யாருக்கு சாதகம்?