டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மழையின் உதவியால் டி.எல்.எஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் ஒரு கால் வைத்துவிட்டது.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி:
undefined
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ
வங்கதேச அணி:
நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹுசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், டஸ்கின் அகமது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். முதல் 3 போட்டிகளில் சரியாக ஆடாத கேஎல் ராகுல் மீது கேள்விகள் எழுந்தன. அவர் ஆடும் லெவனில் தேவையா என்றெல்லாம் கேட்கப்பட்டது. அவருக்கு பதில் ரிஷப் பண்ட்டை ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்துகள் கூட எழுந்தன.
எனவே கண்டிப்பாக ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த ராகுல் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். கேஎல் ராகுல் 32 பந்தில் 50 ரன்களும், விராட் கோலி 44 பந்தில் 64 ரன்களும் அடிக்க, சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்கள் அடித்து அருமையான கேமியோ பங்களிப்பு செய்ய 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்களை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது.
185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி பவுண்டரிகளாக விளாசினார். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஷமி என இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கி 21 பந்தில் அரைசதம் அடித்தார் லிட்டன் தாஸ்.
லிட்டன் தாஸின் அதிரடி அரைசதத்தால் 7 ஓவரில் வங்கதேச அணி 66 ரன்களை குவித்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றபின் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, டி.எல்.எஸ் முறைப்படி 15 ஓவரில் 151 ரன்கள் வங்கதேசத்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் அடித்திருந்த நிலையில், எஞ்சிய 8 ஓவரில் 85 ரன்கள் தேவைப்பட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கியதும், முதல் ஓவரை (இன்னிங்ஸின் 8வது ஓவர்) அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் 2வது ரன் ஓடும்போது கேஎல் ராகுல் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்தார். இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி 27 பந்தில் 60 ரன்களை குவித்த லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட்டாக்கி அனுப்ப, அதன்பின்னர் ஷாண்டோ(21), அஃபிஃப் ஹுசைன்(3), யாசிர் அலி(1), ஷகிப் அல் ஹசன் (13), மொசாடெக் ஹுசைன்(6) என வங்கதேச பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது.
பாகிஸ்தான் அணிக்கு மரண அடி.. காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய அதிரடி வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக படுமோசமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர்கள், இந்த போட்டியில் அபாரமாக ஃபீல்டிங் செய்து மழைக்கு பின் வங்கதேச வீரர்கள் கொடுத்த அனைத்து கேட்ச்களையும் பிடித்தனர். 15 ஓவரில் 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியை 145 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிட்டது.