இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.
உலகக் கோப்பையின் 13ஆவது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்று இந்தியா தனது 6ஆவது போட்டியான 29ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டுகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
India vs England: பயிற்சியின் போது ரோகித் சர்மாவிற்கு காயம் – ஓடி வந்து சிகிச்சை அளித்த பிசியோ!
இரு அணிகளும் மோதும் இந்த 29ஆவது லீக் போட்டி லக்னோவில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதுவரையில் இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியானது டையில் முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று இரு அணிகளும் 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 57 போட்டிகளிலும் இங்கிலாந்தும், 44 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது லக்னோவில் நடக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் லக்னோவில் நடந்த போட்டிகளில் 2 ஆவது பேட்டிங் செய்த அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிகபட்சமாக 311/7 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 177/10 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.