இந்தியாவில் இன்னும் 2 வாரங்களில் உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாக வீரர்கள் பலரும் காயமடைந்தது அந்தந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா நடத்தும் 13ஆவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா என்று 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், தான் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வீரர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் யார் யார்? என்று இந்தப் பதிவில் காணலாம்.
அக்ஷர் படேல்:
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றின் வங்கதேசத்திற்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் இடது கையில் காயம் அடைந்தார். ஆதலால், அவர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று விளையாடினார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டியில் இடம் பெறாத நிலையில், கடைசி ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ளார். எனினும், உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை 2023 தொடரின் போது முதுகு பிடிப்பு காரணமாக வெளியேறினார். இந்த தொடரில் அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ளார். உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிராவிஸ் ஹெட்:
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம் பெறாத டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
துஷ்மந்தா சமீரா:
பிரீமியர் லீக் தொடரின் போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லங்கா துஷ்மந்தா சமீரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆகையால், ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெறுவதும் சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
ஆண்ட்ரிச் நோர்ட்ஜே:
தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே கீழ் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆகையால், அவர் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவது கேள்விக்குறி தான்.
வணிந்து ஹசரங்கா:
இலங்கை அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்கா, லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. ஆதலால், அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெறவில்லை. மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம் தான்.
மஹீஷ் தீக்ஷனா:
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியின் போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறினார். ஆகையால், அவர் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. எனினும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெறுவதும் சந்தேகம் தான்.
நசீம் ஷா:
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தோள்பட்டையில் காயம் அடைந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த காயம் அவரை உலகக் கோப்பைக்கான போட்டியில் இருந்து வெளியேற்றியது.
ஹரீஷ் ராஃப்:
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ராஃப் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த நிலையில் வெளியேறினார். இதனால், அவர் உலகக் கோப்பைக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டிம் சவுதி:
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி, இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது அவர், உலகக் கோப்பையில் இடம் பெறுவாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.