இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கிய்ள்ளது. குரூப் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், அமெரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
சூப்பர் 8 சுற்று போட்டியில், இந்தியா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை எட்டியிருக்கிறது. எனினும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்ட ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், போட்டி கைவிடப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். ஏற்கனவே 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி கூடுதலாக ஒரு புள்ளி வீதம் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும். இதே போன்று 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா கூடுதலாக ஒரு புள்ளி வீதம் 3 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கும்.
இதே போன்று 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.
ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். ஆகையால் இந்தப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதே போன்று இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.