இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமெரிக்கா முதல் அணியாக வெளியேறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சுற்று போட்டியில் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், ஒரு தோல்வியும் அடைந்து நிலையில் ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக எஞ்சிய 2 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருந்தது. 2ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
undefined
இந்த நிலையில் தான் கடைசியாக இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக நிதிஷ் குமார் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், பின்வரிசை வீரர்கள் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழக்கவே அமெரிக்கா 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், சால்ட் 25 ரன்களும், ஜோஸ் பட்லர் 83 ரன்களும் எடுக்கவே 9.4 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அமெரிக்கா 3 போட்டியிலும் தோல்வி அடைந்து அரையிறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.