அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு கால் பதித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி பார்படோஸில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அமெரிக்கா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஸ்டீவென் டெய்லர் 12 ரன்கள் எடுக்க, ஆண்ட்ரீஸ் கவுஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதிஷ் குமார் 30 ரன்கள் எடுக்க, ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கோரி ஆண்டர்சன் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்மன்ப்ரீத் சிங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அலி கான், நோஸ்துஷ் கென்ஜிகே, சவுரப் நெட்ராவால்கர் ஆகியோர் வரிசையாக 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். வான் ஷால்க்விக் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக அமெரிக்கா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரீஸ் டாப்ளே ஒரு விக்கெட் எடுத்தார். சாம் கரண் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லியாம் லிவிங்ஸ்டன் ஒரு விக்கெட் எடுக்க, கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் 19 ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். இதில் 18.1 ஆவது பந்தில் கோரி ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் அலி கான் ஆட்டமிழக்கவே, 4ஆவது பந்தில் நோஷ்துஷ் கென்ஜிகே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சிக்கவே சவுரவ் நெட்ராவால்கர் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ் ஜோர்டன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில் இருவரும் இணைந்து 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக முதல் அணியாக அமெரிக்கா டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்த இங்கிலாந்து 2021ல் அரையிறுதிப் போட்டி வரை வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிராபியை வென்றது. தற்போது மீண்டும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
First England bowler to pick a hat-trick in Men's T20Is 😍
Chris Jordan makes history in Barbados 👏 pic.twitter.com/qgg1hTIQfh