டி20 போட்டிகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், விராட் கோலி 50ஆவது இடமும், ரோகித் சர்மா 51அவது இடமும் பிடித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா தவிர ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தடுமாறி வருகிறார். 3 போட்டிகளில் விளையாடி 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர்.
இதில், சூர்யகுமார் யாதவ் 837 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3ஆவது இடத்திலும், முகமது ரிஸ்வான் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 742 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் 710 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 693 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 8ஆவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங் 668 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 661 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் 13 ஆவது இடத்திலும், ரிங்கு சிங் 37ஆவது இடத்திலும் இருக்கின்றனர். விராட் கோலி 2 இடங்கள் சரிந்து தரவரிசைப் பட்டியலில் 50ஆவது இடத்தையும், ரோகித் சர்மா 2 இடங்கள் சரிந்து 51ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இதே போன்று டி20 பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் 696 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணி வீரர் அக்ஷர் படேல் 9ஆவது இடம் பிடித்துள்ளார். ரவி பிஷ்னோய் 12ஆவது இடமும், அர்ஷ்தீப் சிங் 20ஆவது இடமும், குல்தீப் யாதவ் 4 இடங்கள் சரிந்து 31ஆவது இடமும் பிடித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா 50ஆவது இடம் பிடிக்க, முகமது சிராஜ் 60ஆவது இடம் பிடித்துள்ளார். பும்ரா ஒரு இடம் முன்னேறி 68ஆவது இடம் பிடித்துள்ளார். டி20 ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா 192 புள்ளிகளுடன் 7ஆவது இடம் பிடித்துள்ளார். நம்பர் 1 இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருக்கிறார்.