
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. இதில், துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 18 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 136 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். ஆம், அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்று இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் அதிக சதம் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக மிதாலி ராஜ் 211 இன்னிங்ஸ்களில் 7 சதம் விளாசியிருந்தார். தற்போது இந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா 84ஆவது இன்னிங்ஸில் சதம் விளாசி சமன் செய்துள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அவர் 88 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலமாக இந்திய கிரிக்கெட்டில் ஜெர்சி நம்பர் 7 மற்றும் 18 ஆட்சி புரிந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்கள் கிரிக்கெட்டில் ஜெர்சி நம்பர் 7 தோனி மற்றும் ஜெரிசி நம்பர் 18 விராட் கோலி இருவரும் இணைந்து பல சாதனைகளை புரிந்திருந்தனர். தற்போது மகளிர் கிரிக்கெட்டில் ஜெர்சி நம்பர் 7 கொண்ட ஸ்மிருதி மந்தனாவும், ஜெர்சி நம்பர் 18 கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் இணைந்து சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
பேட்டிங்கில் கலக்கிய ஸ்மிருதி மந்தனா பவுலிங்கிலும் கலக்கியுள்ளார். விராட் கோலி போன்று பந்து வீசிய ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.